ஜூலை 24 – நீ தாமதிக்கிறது என்ன?

“இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்” (அப். 22:16).

தாமதிக்கிறதினால் அநேகர் மேன்மையான ஆசீர்வாதங்களை இழந்துப் போய் விடுகிறார்கள். யுத்த நேரங்களில் ஆயுதமும், உணவுப் பொருட்களும் தாமதமாய் வருமென்றால், அந்த சேனை வெற்றி பெறுவது எப்படி? அலுவலகத்திற்கு தாமதமாக வருவதை ஒருவன் வழக்கமாகக் கொண்டிருந்தால், அவன் நீடித்து வேலையில் இருப்பதெப்படி? பள்ளிக்கூடத்திற்கு தாமதமாகவே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால், பிள்ளை படிப்பிலே முன்னேறுவது எப்படி?

நீங்கள் ஆசீர்வாதங்கள் தாமதமாக வருவதை விரும்புவதில்லை. உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணம் துரிதமாக கிடைக்காமல் போனால் நீங்கள் பொறுமையை இழந்துவிடுகிறீர்கள். சீக்கிரமாய் வர வேண்டிய கடிதம் காலம் தாழ்த்தி வருமென்றால் அதனால் நீங்கள் கலக்கமும், மன வேதனையும் அடைய வேண்டியதிருக்கிறது. அதே நேரம் கர்த்தருடைய காரியத்தில் நீங்கள் தாமதமாக இருக்கலாமா என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்!

சிலர் ஆலயத்திற்கு தாமதமாகவே வருவார்கள். துதி ஆராதனை, பாடல் வேளை, ஜெப வேளை முடிந்து, பாதி பிரசங்கத்தில் வந்து உட்காருவார்கள். இதனால் அவர்களால் தேவ சமூகத்தின் ஆசீர்வாதங்கள் முழுவதையும் அனுபவிக்காமல் போய் விடக்கூடும். சிலர் இரட்சிப்பை தாமதப்படுத்துவார்கள். சிலர் ஞானஸ்நானத்தை தாமதப்படுத்துவார்கள். சிலர் ஊழியம் செய்ய புறப்படுவதில் தாமதிப்பார்கள். வேதம் சொல்லுகிறது; “இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுக்கொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்” (அப். 22:16).

நீங்கள் தாமதத்தை எதற்கு அனுமதித்தாலும், இரட்சிக்கப்படுவதற்கு அதை ஒரு நாளும் அனுமதிக்கக்கூடாது. சிலுவையண்டை நின்று, “ஆண்டவரே, இன்றைக்கே என்னை ஏற்றுக் கொள்ளும், என்னை உம்முடைய இரத்தத்தால் கழுவும், என்னை பரிசுத்தப்படுத்தும்” என்று அழுது ஜெபித்து இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எப்பொழுது கர்த்தருடைய வருகை இருக்குமென்று தெரியாது. இரட்சிக்கப்படாமல் வருகையிலே கைவிடப்படுவது எத்தனை வேதனையானது!

சோதோம் அழிவுக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆண்டவர் வானத்திலிருந்து அக்கினியையும், கந்தகத்தையும் இறங்கப்பண்ணி, அதை முற்றிலும் எரித்துப் போட தீர்மானித்தார். அதற்கு முன்பாக அங்கேயிருந்த லோத்தின் மேல் மனதுருகி, அவனையும் அவனுடைய குடும்பத்தையும் காப்பாற்ற தம்முடைய தூதர்களை அனுப்பினார். வேதம் சொல்லுகிறது: “லோத்தோ தாமதித்துக் கொண்டிருந்தார்” (ஆதி. 19:16). சோதோமை விட்டு வெளியே வர அவருக்கு பிரியமில்லை. அங்குள்ள நீர்ப்பாய்ச்சலான நிலங்கள் மேல் அவருடைய கண்கள் பதிந்திருந்தன.

முடிவாக லோத்தின் தாமதத்தைக் கண்ட அந்த தேவதூதர்கள் லோத்தின் கரத்தைப் பிடித்து சோதோமை விட்டு வெளியே இழுத்துக் கொண்டு வந்தார்கள். தேவபிள்ளைகளே, இந்த உலகம் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது. உலகத்தை நம்புவதற்கோ, அதன் காரியங்களில் விருப்பத்தை வைப்பதற்கோ அதில் உண்மையான மேன்மை ஒன்றுமேயில்லை. ஆகவே, நீங்கள் எக்காரணத்திற்காகவும் இரட்சிப்பைக் குறித்து காலதாமதம் செய்யாதிருங்கள்.

நினைவிற்கு:- “தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்” (அப். 9:20).

Article by elimchurchgospel

Leave a comment