ஜூலை 23 – என்ன செய்ய வேண்டும்?

“தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள்” (யோவான் 6:28).

இது வேதத்திலுள்ள மிக முக்கியமான கேள்வியாகும். மாத்திரமல்ல, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியமான கேள்வியும்கூட. தேவனுக்கேற்ற கிரியைகளை செய்ய வேண்டுமென்றால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பிக்க வேண்டுமென்றால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

இயேசு ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்ததை ஜனங்கள் கண்டார்கள். தாங்களும் அதைப்போல அற்புதங்களை செய்யவேண்டுமென்று விரும்பினார்கள். தங்கள் வாழ்க்கை ஒரு பயனுள்ள வாழ்க்கையாய் அமைய வேண்டுமென்றால், தேவனுடைய அற்புதங்களைச் செய்கிற வல்லமை தங்களுக்கும் அவசியம் என்பதை உணர்ந்தார்கள். ஆகவேதான் அவர்கள் தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டார்கள்.

இயேசுவின் வாழ்க்கை முழுவதையும் வாசித்துப் பாருங்கள். அவர் பூமியிலே வாழ்ந்த நாட்களிலே அவர் செய்த அற்புதங்களின் மூலமாகத்தான் தேவனுடைய குமாரன் என்பதை நிரூபித்தார். அவர் வெறும் தத்துவ ஞானம் பேசுகிறவராய் வரவில்லை. அவர் என்ன பேசினாரோ அதை அற்புதங்களின் மூலமாய், பலத்த செய்கைகளின் மூலமாய் நிரூபித்தும் காண்பித்தார். வேதம் சொல்லுகிறது: “இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்” (யோவான் 6:14).

கிறிஸ்து செய்த அற்புதங்களை அவருடைய பிள்ளைகளாகிய நீங்களும் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார். இயேசு சொன்னார்: “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” (யோவான் 14:12). நீங்கள் கர்த்தருக்காக பலத்த கிரியைகளை நடப்பிக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? உங்கள் உள்ளத்திலே அவர் செய்த கிரியைகளை நீங்களும் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறதா? தேவனுக்கேற்ற கிரியைகளை செய்ய நான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்கிறீர்களா? அப்படியானால், பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் நிரப்பப்பட முற்படுங்கள்.

இன்று உலகத்தின் கடைசி நாட்களுக்குள் வந்திருக்கிறீர்கள். உலகத்தின் பெரும் பகுதியான மக்கள் இன்னும் கிறிஸ்துவைக் குறித்து அறிந்துகொள்ளவில்லை. அவருடைய வல்லமையைக் காணவில்லை. அழகான, ஆடம்பரமான பிரசங்கங்களை பண்ணிக் கொண்டிருப்பதால் ஒரு பிரயோஜனமுமில்லை. உங்களுடைய வார்த்தைகள் அற்புதங்களால் உறுதி செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் புறஜாதி மக்கள் கர்த்தரே தேவன் என்று அவரை பணிந்துகொள்ளுவார்கள்.

இயேசு அற்புதங்களின் மூலமாய் ஜனங்களின் கவனத்தை ஈர்த்தார். தேவனுடைய வல்லமையை ஜனங்கள் மத்தியிலே நடைமுறையில் வெளிப்படுத்திக் காண்பித்தார். தான் தேவகுமாரன் என்பதை அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் நிரூபித்தார். மாத்திரமல்ல, அவைகளை நாமும் செய்யும்படி வாக்குறுதிகளையும் வாக்குத்தத்தங்களையும் தந்திருக்கிறார். தேவபிள்ளைகளே, கர்த்தருக்காக எழும்பி பிரகாசிப்பீர்களா? அவர் ஜீவனுள்ளவர் என்பதை நிரூபிப்பீர்களா?

நினைவிற்கு:- “அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள்” (யோவான் 6:2).

Article by elimchurchgospel

One comment

Leave a comment