Appam, Appam - Tamil

ஜூலை 20 – மூன்றாந்தரமும்!

“என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்; நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான்” (யோவா. 21:17).

பேதுரு மூன்று முறை இயேசு கிறிஸ்துவை மறுதலித்ததினாலேயே இயேசு கிறிஸ்து அவரைப் பார்த்து, நீ அன்பாயிருக்கிறாயா என்று மூன்று முறை கேட்டார். அந்த மறுதலித்தலைக் கழுவிச் சுத்திகரிக்க அதிகமான அன்பு வேண்டியதிருந்தது.

நீ என்மேல் அன்பாயிருக்கிறாயா என்று அவர் கேட்டதற்கு ‘நீ எவ்வளவுக்கெவ்வளவு என்னை மறுதலித்தாயோ அதை மேற்கொள்ளக்கூடிய அன்பு, இனிமேலும் மறுதலியாத அன்பு, துக்கப்படுத்தியதற்குத்தக்கதாக சந்தோஷப்படுத்துகிற அன்பு, உன்னிடத்தில் இருக்கிறதா?’ என்பதே அர்த்தமாகும்.

ஒரு தகப்பன், தன் மகன் துஷ்ட வழியில் சென்று, இருதயத்தை புண்படுத்தும்போதெல்லாம் ஒரு ஆணியை எடுத்து வீட்டின் முன்னே நின்ற ஒரு சிறிய மரத்தில் அறைவார். ‘மகனே, இந்த ஆணி மரத்தைக் குத்துகிறதுபோல உன் தீய செயல் என் உள்ளத்தைக் குத்துகிறது’ என்று மகனிடம் சொல்லுவார். சில மாதங்களுக்குள் அந்த மரத்திலே நூற்றுக்கணக்கான ஆணிகள் பதிய நேர்ந்தது.

ஆனால், ஒரு நாள் அந்த மகன் இரட்சிக்கப்பட்டான். தன் தகப்பனிடம், ‘அப்பா, எவ்வளவுக்கெவ்வளவு உங்களை வேதனைப்படுத்தினேனோ அவ்வளவுக்கு அதிகமாய் உங்களை நேசித்து, அன்பு செலுத்தி, உங்களுக்கு பிரியமாய் நடந்துகொள்ளுவேன்’ என்றான். அன்று முதல் அவன் நற்கிரியை செய்ய ஆரம்பித்தான். மகனைக்குறித்து தகப்பனுடைய மனம் மகிழும்போதெல்லாம் அவர் ஒவ்வொரு ஆணியாக மரத்திலிருந்து அகற்ற ஆரம்பித்தார். சில மாதங்களுக்குள் அந்த ஆணிகள் முற்றிலும் அகற்றப்பட்டன. ஆனாலும் மரத்தில் அந்த தழும்புகள் மட்டும் காணப்பட்டன. ஆகவே, அந்த வாலிபன் மரத்திற்கு உரமிட்டு தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தான். மரம் விசாலமாய் வளர்ந்ததுடன் தழும்புகளும் மறைந்துவிட்டன.

அதுபோலவே நாமும்கூட பாவத்தில் வாழும்போது, அந்த பாவங்களே ஆணிகளாய் மாறி இயேசுவின் கரங்களை துளைக்கிறதையும், நம்முடைய துணிகரமான செயல்களே அவருடைய விலாவில் ஈட்டிபோல பாய்கிறதையும் அறியாமல் இருந்துவிடுகிறோம். பேதுரு அவரை மறுதலித்தபோது இயேசு எவ்வளவு துக்கப்பட்டிருந்திருப்பார்! அவருடைய இருதயத்தில் பட்டயம் ஊடுருவியதைப்போல இருந்திருக்கும். ஆகவேதான் கர்த்தர் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று பேதுருவிடம் கேட்டார். முதல் இரண்டு தரம் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று கேட்ட அவர், மூன்றாந்தரம் நீ என்னை நேசிக்கிறாயா என்று கேட்டார். அதற்கு பேதுரு, ‘நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்’ என்றான்.

அதனுடைய அர்த்தம் என்ன? முன்பு நான் உம்மில் அன்புகூர வேண்டிய அளவு அன்புகூரவில்லை. நீர் பாராட்டின அன்புக்கு நான் துரோகம்தான் செய்தேன். இனி இதுவரை கொடாத அன்பையும், அதோடுகூட துரோகம் பண்ணியதற்கு ஈடாக அதிகமான அன்பையும் சேர்த்து உமக்குக் காண்பிப்பேன். இனி அளவற்ற அன்பினால் எப்பொழுதுமே உம்மை நேசிப்பேன் என்பதே அதன் அர்த்தமாகும். தேவபிள்ளைகளே, நீங்களும் அளவற்ற அன்பினால் கர்த்தரை நேசிப்பீர்களா?

நினைவிற்கு:- “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.