ஜூலை 16 – நம்முடன் இருக்கிறவர்!

“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா. 41:10).

கர்த்தர் நம்மோடு இருப்பதுடன், நம்மில் வாசமும் செய்கிறவர். நம்மோடு வழி நடக்கிறவர், என்றென்றைக்கும் நம்மை விட்டு விலகாதிருக்கிறவர், இம்மானுவேல் என்ற அவரது பெயருக்கு “தேவன் நம்மோடு இருக்கிறார்” என்பது அர்த்தமாகும்.

அநேகர் கர்த்தர் தங்களோடிருக்கிறார் என்பதை விசுவாசியாததினால்தான்   அவர் எங்கேயோ தூரமாக இருக்கிறவராகவே எண்ணுகிறார்கள். அவர் நம்மோடு இருக்க மாட்டார். பரிசுத்த தேவதூதர்களோடுதான் இருப்பார். கேரூபீன்கள் சேராபீன்களோடுதான் இருப்பார். பரலோகத்திலுள்ள நான்கு ஜீவன்கள், இருபத்தி நான்கு மூப்பர்களோடுதான் இருப்பார் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவேதான் அவர்களால் கர்த்தருடைய இனிமையான பிரசன்னத்தை உணர முடியவில்லை.

தேவன் பரலோகத்தில் வாசம் பண்ணுகிறார் உண்மைதான். ஆனால் நீங்கள் அவர் மேல் விசுவாசம் வைத்து அவரை ஏற்றுக்கொள்ளும் போது,  உங்களுடைய தகப்பனாக அருகிலே வந்து விடுகிறார். அவரைப் பாடி துதித்து மகிழும்போது, துதிகளின் மத்தியிலே வாசம் பண்ணுகிறவர், உங்களுடைய மத்தியிலே வாசம் பண்ண வந்துவிடுகிறார்.

வேதம் முழுவதிலும் கர்த்தர் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்களிலே பிரதானமான வாக்குத்தத்தம், “நான் உன்னோடுகூட இருக்கிறேன்” என்ற வாக்குத்தத்தம்தான். வேதத்திலுள்ள ஒவ்வொரு பரிசுத்தவானுக்கும் அவர் இந்த வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறதைக் காணலாம். ஆகவேதான் அவர்கள் பயப்படாமல் திகையாமல் முன்னேறிச் சென்றார்கள். கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களைச் செய்தார்கள்.

யோசுவா தைரியமாய் முன்னேறிச் சென்று கானான் தேசத்தை சுதந்தரித்துக் கொண்டதின் காரணம் என்ன? “நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (யோசு. 1:5) என்ற கர்த்தருடைய வாக்குத்தத்தம்தான் காரணமாயிருந்தது.

ஒரு காலத்தில் பயந்து நடுங்கிய சீஷர்கள், மறுதலித்து சபித்து சத்தியம் பண்ணின சீஷர்கள், வல்லமையுள்ளவர்களாய் எருசலேமை கலக்குகிறவர்களாய் மாறக் காரணம் என்ன? ஆயிரமாயிரமான ஆத்துமாக்களை அறுவடை செய்ததின் இரகசியம் என்ன? அது கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தம்தான். “இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத் 28:20) என்று அவர் சொன்னதினாலே அவர்கள் திடன் அடைந்தார்கள். பெலன்கொண்டு வல்லமையாய் ஊழியம் செய்தார்கள்.

தேவபிள்ளைகளே, இன்றைக்குக் கர்த்தர் “நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே, நான் உன் தேவன்” என்று வாக்குப் பண்ணுகிறார். சகல அதிகாரமுள்ள சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களோடிருக்கும்போது, நீங்கள் பயப்படவோ, கலங்கவோ, திகைக்கவோ அவசியம் இல்லையே!

நினைவிற்கு:- “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” (சங். 23:4).

Article by elimchurchgospel

Leave a comment