ஜூலை 14 – கிராமங்களில்!

“வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்” (உன். 7:11).

கிராமங்களின் வாழ்வே தேசத்தின் வாழ்வு. கிராமங்களின் எழுப்புதலே தேசத்தின் எழுப்புதல். கிராம மக்களையும் கர்த்தருடைய வருகைக்காய் ஆயத்தப்படுத்தவேண்டியது நம்முடைய கடமை அல்லவா?

என்னுடைய தகப்பனார் ஊழியத்தின் ஆரம்ப காலங்களில் மிக அதிகமாக கிராம ஊழியங்களில் ஈடுபட்டதுண்டு. காலையிலிருந்து மாலை வரையிலும் ஏராளமான கிராமங்களுக்கு சென்று பாட்டுப் பாடி, சுவிசேஷத்தை அறிவித்து, அவர்களைக் கர்த்தரிடத்தில் வழி நடத்தியதுண்டு. தெருக்களிலும், வீதிகளிலும் இராத்தங்கின சந்தர்ப்பங்களுண்டு. ஆனாலும், அவருக்கு கிராமங்களில் தங்குவது என்பது இயேசுவோடு தங்குவதைப் போன்று இருக்கும்.

உன்னதப்பாட்டில் சூலமித்தி நேசரைப் பார்த்து அழைக்கிற இந்த அழைப்பைப் பாருங்கள். வேதம் சொல்லுகிறது, “வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்”. நீங்கள் அப்படி நேசரை அழைப்பீர்களா?

கிராம மக்கள் கபடில்லாதவர்கள். அந்நியரை உபசரிக்கும் அன்புள்ளவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள். நீங்கள் சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள். ஆனால் இதுவரையும் அவர்கள் மூடநம்பிக்கையிலும், இருளிலும் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத அத்தனை மக்களையும் கர்த்தரண்டை கொண்டு வரவேண்டியது உங்களுடைய கடமை அல்லவா?

யோனாவின் ஒரு பிரசங்கத்தைக் கேட்டு லட்சக்கணக்கான மக்கள் மனம் திரும்ப முடியுமானால் நிச்சயமாகவே உங்களுடைய செய்தியைக் கேட்டு லட்சக்கணக்கான கிராம மக்கள் மனம் திரும்பக்கூடும்.

ஒரு முறை இலங்கையில் நடந்துக் கொண்டிருந்த போரின் காரணமாக அங்கிருந்த கிராம மக்கள் மிகவும் பயமும் திகிலும் அடைந்தார்கள். பெரும்பாலான கிராமங்களில் மின்சார வசதியிருக்காது. திடீரென்று இராணுவம் வந்து அங்குள்ள வாலிபர்களைக் கைது செய்து கொண்டு போய்விடுவார்கள். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வாலிபர்களைக் கட்டாயப்படுத்தி தங்கள் இயக்கங்களுக்கு அழைத்துச் செல்லுவார்கள். பெற்றோரோ, தங்கள் வாலிபப்பிள்ளைகளைப் பாதுகாக்க வழியில்லாமல் திகைத்தார்கள்.

அவர்களுக்கு கர்த்தருடைய அன்பையும், ஆதரவையும், அடைக்கலத்தையும் எடுத்துக்கூற போதுமான ஆட்கள் இல்லை. போக்குவரத்து வசதிகளும் இல்லை. கிராமங்களிலே ஊழியம் செய்த பல ஊழியர்கள் பட்டணங்களை நோக்கி நகர்ந்து விட்டார்கள். இன்னும் பலர் வெளி தேசங்களுக்கு ஊழியர்களாக சென்று விட்டார்கள். மக்களின் பரிதாப நிலையை யோசித்துப் பாருங்கள்.

ஆகவே ஒவ்வொரு சபையும் கிராம ஊழியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு விசுவாசியும் கிராமங்களுக்குச் சென்று இயேசுவோடு தங்கியிருந்து ஊழியம் செய்யவேண்டும். ராஜ்யத்தின் இந்தச் சுவிசேஷம் சகல ஜனங்களுக்கும் சாட்சியாக அறிவிக்கப்பட வேண்டும் (மத். 24:14) என்று இயேசு சொன்னாரே!

நினைவிற்கு:- “தெபோராளாகிய நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும், கிராமங்கள் பாழாய்ப்போயின. இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப் போயின” (நியா. 5:7).

Article by elimchurchgospel

Leave a comment