Appam, Appam - Tamil

ஜூலை 02 – தங்கியிருப்பவன்!

“பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன். அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்” (உபா. 33:12).

பென்யமீனின் ஆசீர்வாதத்தைக் கர்த்தர் இன்று உங்களுக்குத்தரும்படி சித்தமாயிருக்கிறார். அன்றைக்கு மோசே பென்யமீன் கோத்திரத்தை ஆசீர்வதித்தபோது பென்யமீனை, “கர்த்தருக்குப் பிரியமானவன்” என்று குறிப்பிட்டார்.

பென்யமீன் பிறந்தபோது அவனுடைய தாயார் அவனுக்கு துக்கத்தின் மகன் என்று சொல்லி பெனோனி என்று பேரிட்டாள். தகப்பனோ, அதை மாற்றி என் வலதுகரத்தின் மகன் என்று அர்த்தம்கொள்ளும் வகையில் பென்யமீன் என்று பேரிட்டான். யாக்கோபுக்கு பன்னிரெண்டு குமாரர்கள் இருந்தபோதிலும்கூட, இவன் மாத்திரம் கானான் தேசத்திலே பெத்லகேமுக்கு அருகாமையிலே பிறந்தான். பாருங்கள்! கர்த்தர் அன்போடு பென்யமீனைப் பார்த்து, ‘நீ எனக்குப் பிரியமானவன். நீ என்னோடு சுகமாய் தங்கியிருப்பாய்’ என்று சொல்வது எத்தனை ஆறுதலான வார்த்தைகள்!

கர்த்தர் உங்களைப் பிரியமானவன் என்று அழைக்கிறதினாலே நீங்களும் எப்போதும் அவருக்கு பிரியமானவர்களாய் நடந்துகொள்ளுங்கள். அவருக்குப் பிரியமானதை மாத்திரம் செய்ய ஒப்புக்கொடுங்கள். இயேசுவைப் பாருங்கள். “பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்” (யோவான் 8:29) பிதாவுக்குப் பிரியமாய் நடந்துகொள்ளும்போது அவர் உங்களைவிட்டு விலகமாட்டார். உங்களைக் கைவிடமாட்டார். மாத்திரமல்ல, உங்களோடு அவர் வாசம்பண்ணுவார். கூடவே பென்யமீனின் ஆசீர்வாதத்தை உங்களுக்கும் தருவார். நீங்கள் சுகமாய்த் தங்கியிருப்பீர்கள். ‘நான் உன்னை எந்நாளும் காப்பாற்றி நான் உன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தமிழ் வேதாகமத்தில் “சுகமாய்த் தங்கியிருப்பான்” என்று சொல்லப்படுகிற வார்த்தை, ஆங்கில வேதாகமத்தில் “பாதுகாப்பாய்த் தங்கியிருப்பான்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய பாதுகாப்புதான் மேன்மையான பாதுகாப்பு. மாத்திரமல்ல, எந்நாளும் நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று கர்த்தர் வாக்களிக்கிறார். எந்நாளும் காப்பாற்றுவார். உண்ண உணவும், உடுக்க வஸ்திரமும் தருகிறது மாத்திரமல்ல, உங்கள் ஆத்துமாவுக்கும் உணவளித்து எந்நாளும் காப்பாற்றுவார்.

உலகம் திறந்துவிடப்பட்ட நிலைமையில் இருக்கிறது. விபத்துக்களும், சோதனைகளும் பெருகியிருக்கிறன. சாத்தான் அநேகம்பேரை வஞ்சித்து பாதாளத்திற்குள் வழிநடத்திச் செல்லுகிறான். ஆனால் கர்த்தரோ, உங்களை எந்நாளும் பாதுகாப்பார். வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்” (சங். 121:7, 8). தேவபிள்ளைகளே, கர்த்தர் ஒருவரையே பிரியப்படுத்த தீர்மானியுங்கள். வேதவாசிப்பிலும், ஜெபத்திலும் முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து, கர்த்தருக்கு முன்பாகப் பிரியமானவர்களாய் காணப்படுங்கள். அப்போது நீங்களும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

நினைவிற்கு:- “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக” (சங். 143:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.