செப்டம்பர் 16 – அவரையே பிரியப்படுத்துங்கள்!

“நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்” (சங். 41:11).

கர்த்தரைப் பிரியப்படுத்த வாஞ்சியுங்கள். “கர்த்தாவே உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்” என்று ஜெபியுங்கள். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று சோதித்துப் பாருங்கள். மட்டுமல்ல, கர்த்தர்மேல் வைத்திருக்கிற பிரியத்தைச் செயல்படுத்துங்கள்.

நம்முடைய முற்பிதாவாகிய யாக்கோபு, ராகேலின் மேல் பிரியம் வைத்தார். அந்தப் பிரியத்துக்காக அவர் எந்தத் தியாகமும் செய்ய ஆயத்தமாயிருந்தார். அந்தப் பிரியத்தை அவர் செயல்படுத்த பதினான்கு ஆண்டுகள் லாபானுக்கு அடிமையைப் போல ஊழியம் செய்ய வேண்டியதாயிற்று. ஆடுகளை மேய்த்து இரவென்றும் பகலென்றும் பாராமல், கடினமாக உழைத்தார் (ஆதி. 29:18).

காரணம், ராகேல் ரூபவதியும், பார்வைக்கு அழகுள்ளவளுமாயிருந்தாள் (ஆதி. 29:17). மட்டுமல்ல, அவள் யாக்கோபை மிகவும் கவர்ந்ததினாலே “அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது” (ஆதி. 29:20).

போதகர் ரிச்சர்ட் உம்பிராண்டு அவர்கள், கர்த்தரைப் பிரியப்படுத்தத் தீர்மானித்ததின் விளைவாக பதினான்கு ஆண்டுகள் சிறையிலே வாட வேண்டியதாயிற்று. கிறிஸ்துவை மறுதலித்திருந்தால் அவர் விடுதலையாகியிருந்திருக்கக்கூடும். ஒரு சில பொய்களை சொல்லியிருந்தால் சித்திரவதைக்கு தப்பியிருந்திருக்கக்கூடும். ஆனால் அவர் கர்த்தரையே பிரியப்படுத்த தீர்மானித்ததினால் பதினான்கு ஆண்டுகள் துன்பங்களையும், பாடுகளையும் அனுபவிக்க வேண்டியதாயிற்று.

அவர் விடுதலையாகும்போது, கர்த்தர் சொன்னார், ‘மகனே, யாக்கோபு ஒரு பெண்ணின் மேல் வைத்த அன்பினாலே பதினான்கு ஆண்டுகள் தனது மாமனார் வீட்டில் பாடுகளை அனுபவித்தார். ஒரு பெண்ணுக்காக ஊழியம் செய்து ஒரு பெண்ணுக்காக ஆடுகளை மேய்த்தார் (ஓசியா 12:12). நீயோ உன்னதமான தேவனுடைய நாம மகிமைக்காகப் பாடு அனுபவித்தாய்’ என்றுச் சொல்லி அவரைத் தட்டிக் கொடுத்தார்.

இயேசு கிறிஸ்துவைப் பாருங்கள். அவர் பிதாவைப் பிரியப்படுத்த தீர்மானித்ததினாலே சிலுவையைச் சுமக்க மகிழ்ச்சியோடு தம்மை ஒப்புக்கொடுத்தார். விடுதலையைப் பெற்றுக்கொள்ள சம்மதியாமல் வேதனையை அனுபவிக்க முன் வந்தார். முள்முடிச் சூட்டப்பட்டு, ஆணிகளால் கடாவப்பட்டு, தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் கல்வாரிச் சிலுவையிலே ஊற்றிக் கொடுத்தார்.

அவர் சிலுவையில் பிதாவைப் பிரியப்படுத்தத் தீர்மானித்ததினாலே, “தேவன், எல்லாவற்றிக்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று, நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலி. 2:9-11).

தேவபிள்ளைகளே, நீங்களும்கூட தேவனைப் பிரியப்படுத்துவதையே, உங்களுடைய முழு ஏக்கமும் வாஞ்சையுமாகக் கொண்டால், இவ்வுலகத்தில் நீங்கள் சந்திக்கும் பாடுகளும், கஷ்டங்களும் அதிக பாரமானவையாகத் தோன்றாது.

நினைவிற்கு:- “ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” (வெளி. 2:10).

Article by elimchurchgospel

Leave a comment