செப்டம்பர் 15 – செப்பனிடுங்கள்!

“சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு” (1 இராஜா. 18:30).

உடைந்து, நொறுங்கிக் கிடந்த பலிபீடத்தை எலியா கண்டபோது, அவருடைய உள்ளத்தில் நேச வைராக்கியம் பொங்கி எழுந்தது. தகர்க்கப்பட்ட அந்தப் பலிபீடத்தை மன உறுதியோடு செப்பனிட்டார்.

பலிபீடம் என்பது மனிதன் தேவனை சந்திக்கிற ஒரு இடம். உங்களுடைய உள்ளம் தேவனுக்கு முன்பாக ஒரு பலிபீடமாய் இருக்கிறது. உங்கள் வாழ்க்கை, உங்கள் ஆத்துமா தகர்க்கப்பட்டுக் கிடக்கும் பலிபீடத்தைப் போல இருக்கிறதா? உங்களுக்கும், தேவனுக்கும் இடையே இருந்த உறவு, உங்கள் ஜெப வாழ்க்கை, உங்கள் பரிசுத்த வாழ்க்கை தகர்க்கப்பட்ட நிலைமையில் கிடக்கிறதா? இப்பொழுதே உங்கள் பலிபீடத்தைச் செப்பனிட ஒப்புக்கொடுப்பீர்களென்றால், எலியாவின் தேவன் உங்கள்மேல் தன் அக்கினியை நிச்சயமாகவே போடுவார். அக்கினி இறங்கும்படி உங்கள் பலிபீடம் செப்பனிடப்பட வேண்டும்.

அன்றைக்கு எபேசு சபையைப் பார்த்து ஆண்டவர் சொன்னார்: “ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” (வெளி. 2:5). பலிபீடம் செப்பனிடப்படாமல், அதன்மேல் அக்கினி இறங்குவதென்பது கூடாத காரியம். பலிபீடம் கண்டிப்பாக செப்பனிடப்பட வேண்டும்.

சிலர் தங்கள் வாழ்க்கையைப் பழுது பார்க்காமல், மற்றவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்து குறைகூறிக்கொண்டு திரிவார்கள். மற்றவர்களைக் குற்றவாளியாய்த் தெரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கையிலே வழுக்கி விழுந்து கிடப்பார்கள். வேதம் சொல்லுகிறது, “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறியக்கடவன், நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்” (1 கொரி. 11:28,31).

1903-ம் ஆண்டு வேல்ஸ் தேசத்தில், எழுப்புதலுக்காக பாடுபட்ட இவான் ராபர்ட்ஸ் பிரசங்கம் செய்யும்படி குதிரையில் போய்க் கொண்டிருந்தார். பாதி வழியிலே ஆவியானவர் அவரைத் தடுத்து நிறுத்தி, “என் மகனே, உன் குதிரையை நிறுத்தி உன்னை ஆராய்ந்துபார். உன்னுடைய பலிபீடத்தின் சில பகுதிகள் தகர்ந்து கிடக்கின்றன. முதலாவது நீ அதை சரி செய்துகொள். நான் உன்மேல் அக்கினியைப் போட்ட பின்பு, நீ சென்று பிரசங்கித்தால் அங்கே அதிக பலனைக் காண்பாய்” என்று சொன்னார்.

அதைக் கேட்டதும் அந்த பக்தன் ஏறக்குறைய மூன்று மணி நேரம் தேவ சமுகத்தில் நொறுங்குண்ட, நருங்குண்ட இருதயத்தோடு தன்னை ஆராய்ந்து, தன் வாழ்க்கையை செப்பனிட்டார். அப்பொழுது கர்த்தருடைய மகிமையின் பிரசன்னம் அவர் மேல் நிழலிட்டது. தேவன் அவரை தம் ஆவியினால் அளவில்லாமல் நிரப்பினார். பின்பு அவர் குதிரையின் மேல் ஏறி தான் பிரசங்கிக்க வேண்டிய கிராமத்திற்கு வந்து பிரசங்கித்தபோது, அங்கே அக்கினி விழுந்தது. எல்லாரும் ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். தேவபிள்ளைகளே, எலியாவின் தேவன் உங்கள் மூலம் அக்கினியைப் போட விரும்புகிறார். பலிபீடத்தைச் செப்பனிடுவீர்களா?

நினைவிற்கு:- “அப்பொழுது கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப் போட்டது” (1 இராஜா. 18:38).

Article by elimchurchgospel

Leave a comment