செப்டம்பர் 14 – செட்டைகளின் கீழ்!

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக” (ரூத் 2:12).

கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலம் பெற ஓடி வரும்போது, அவர் நிச்சயமாகவே நிறைவான பலன்களைக் கட்டளையிடுகிறார். கர்த்தரையே சார்ந்து கொள்ளும்போது, மனிதனுடைய கண்களிலே தயவு கிடைக்கப் பண்ணுகிறார். ரூத்தின் சரித்திரத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவள் மோவாபிய தேசத்தைச் சேர்ந்தவள். இஸ்ரவேலிலிருந்து வந்த குடும்பத்தை நேசித்து, அந்தக் குடும்பத்தின் மருமகளாய் ஆனாள். ஆனால், அவளுடைய திருமண வாழ்க்கையோ சந்தோஷமானதாய் நீடிக்கவில்லை. கணவனை இழந்தாள்.

கணவனை இழந்தபோதிலும், அவள் கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக் கொண்டாள் என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலம் பெற ஓடி வந்தாள். அந்த கஷ்ட நாட்களிலும் அவளுடைய உதடுகளில் முணுமுணுப்பு இல்லை. ‘இஸ்ரவேலின் தேவன் எனக்குச் செய்தது என்ன? என் கணவனை எடுத்துக் கொண்டாரே’ என்று எந்த குறை கூறுதலும் அவளிடத்தில் இல்லை.

நகோமி மீண்டும் இஸ்ரவேல் தேசத்திற்குச் செல்லப் புறப்பட்டபோது, அவளுடைய மூத்த மருமகளாகிய ஓர்பாள் அவளோடு செல்லப் பிரியப்படவில்லை. ஆனால் ரூத்தோ, நகோமியை விடாமல் பற்றிக் கொண்டாள். “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உன்னுடைய தேவன் என்னுடைய தேவன்” (ரூத் 1:16) என்று கண்களில் கண்ணீர் மல்க அவள் கூறியது உள்ளத்தை தொடுகிறது. இருள் சூழ்ந்த நிலைமையில், நம்பிக்கையற்ற சூழ்நிலையில், அவள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் மேல் நம்பிக்கை வைத்து அவரையேப் பற்றிக் கொண்டாள்.

எந்த சூழ்நிலையானாலும், எந்த சோதனையானாலும் தேவனை உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அவருடைய செட்டைகளின் நிழலுக்குள் ஓடி வருகிற ஒருவரையும் அவர் மறப்பதில்லை. தன்னைக் கனம் பண்ணுகிறவர்களை அவர் நிச்சயமாகவே கனம் பண்ணுவார். ரூத்தினுடைய வாழ்க்கையின் முதல் பகுதி தோல்வியாய் இருந்தபோதிலும், கர்த்தர் மீண்டும் அவளுக்கு ஒரு புதிய வாழ்க்கையைக் கொடுத்தார். புதிய ஆசீர்வாதத்தைக் கொடுத்தார். நீதிமானாகிய போவாஸை வாழ்க்கைத் துணையாய்த் தந்தருளினார்.

ரூத்தின் வம்சத்தில்தான் தாவீது வருகிறதைக் காண்கிறோம். அந்தக் கோத்திரத்தில்தான் நம் அருமை ஆண்டவராகிய இயேசு பிறந்ததைப் பார்க்கிறோம். புறஜாதி பெண்ணாகிய ரூத்தின் பேரில், வேதத்தில் ஒரு புத்தகமே எழுதி வைக்கும்படி கர்த்தர் சித்தங்கொண்டார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் செட்டைகளின் கீழே அடைக்கலம் பெற்றுக்கொள்ளும்போது வாழ்க்கையில் வருகிற ஆசீர்வாதங்கள் எண்ணற்றவை, மேன்மையானவை, நித்தியமானவை.

தேவபிள்ளைகளே, அவருடைய அடைக்கலத்திலே நீங்கள் உறுதியாய் நில்லுங்கள். புயல் வீசினாலும், வாழ்க்கை கொந்தளித்தாலும் கிறிஸ்துவை மாத்திரம் உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். பஞ்ச காலத்தில் தன் அடைக்கலத்தில் இருந்த எலியாவை கர்த்தர் மேன்மையாய் உயர்த்தவில்லையா? பாடுகளின் பாதையில் தன்னை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட யோபுவை இரட்டத்தனையாய் ஆசீர்வதிக்கவில்லையா? கர்த்தர் நிச்சயமாகவே உங்களையும் ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- “என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி, நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?” (ரூத் 3:1).

Article by elimchurchgospel

Leave a comment