செப்டம்பர் 13 – நீரே சிருஷ்டித்தீர்!

“நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது” (வெளி. 4:11).

நமதருமை ஆண்டவர் சிருஷ்டித்த ஒவ்வொரு சிருஷ்டிப்பும் ஒரு பாடப்புத்தகம். அவற்றை தியானத்தோடு நோக்கிப் பார்த்தால், சிருஷ்டி கர்த்தரின் சுபாவத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (சங். 19:1).

சூரியனை நோக்கிப் பாருங்கள்! சூரியனுக்கு அவ்வளவு மகிமையைத் தந்தவர், தன்னிலே எவ்வளவு அதிக மகிமையுள்ளவராக இருப்பார்! மின்னலுக்கு அத்தனை வேகத்தையும், கூரிய பிரகாசத்தையும் தந்தவர், எவ்வளவு அதிகமாய் உங்களைப் பிரகாசிக்கச் செய்பவராயிருப்பார்! உலகத்தையே குலுக்குகிற இடி முழக்கத்தை ஏற்படுத்தியவர் எவ்வளவு வல்லவராயிருப்பார்! ‘வானம் எனக்கு சிங்காசனம். பூமி எனக்கு பாதபடி’ என்று சொன்னவர், எத்தனை மகிமையுள்ளவராய் எழுந்தருளுவார்! நல்லோர் மேலும், தீயோர் மேலும் மழையை வருஷிக்கப் பண்ணுகிறவர் எத்தனைக் காருண்யம் உள்ளவராயிருப்பார்!

வேதம் சொல்லுகிறது, “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாக் காணப்படும்” (ரோமர் 1:20). ஒவ்வொரு சிருஷ்டிப்பிலிருக்கும் அதிசயங்களை நாம் பார்க்கும்போது, நமது உள்ளம் நன்றியோடு கர்த்தரை நினைத்துப் பொங்குகிறது.

நீங்கள் காணக்கூடாத அவருடைய நித்திய வல்லமையையும், தேவத்துவத்தையும் துதிக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்” (சங். 48:1). கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாகிவிட்டது. துதித்தலுடனே அவருக்கு எதிர்கொண்டு போக ஆயத்தப்படுங்கள்!

“அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்” (சங். 100:4) என்று வேதம் சொல்லுகிறது. பரலோக வாசலின் வழியாக அந்த பொன்மய தேசமான மகிமை ஒளி வீசும் பரம கானானுக்குள் பிரவேசிக்கும்போது, உங்கள் உள்ளம் எவ்வளவாய் ஆனந்தப் பரவசம் அடையும்!

காலம் முடிவை நெருங்குகிறது. சகல சிருஷ்டிப்புகளும் சிருஷ்டிக் கர்த்தரின் வருகையை நினைப்பூட்டுகின்றன. அப். பவுல் சொல்லுகிறார், “இப்பொழுது நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம். அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்” (1 கொரி. 13:12). நீங்கள் அவரைக் கண்குளிரக் காண்பீர்கள். உங்களுடைய கண்கள் ஆனந்தக் கண்ணீரை சொரியும்.

தேவபிள்ளைகளே, கர்த்தரை அதிகமாகத் துதித்து ஸ்தோத்தரிக்கத் தீர்மானம் செய்யுங்கள். நீங்கள் பூமியிலே கர்த்தரைத் துதித்துக்கொண்டேயிருப்பீர்களேயாகில், நித்தியத்திலே என்றென்றைக்கும் அவரைத் துதித்து மகிழ அது வழிவகுக்கும்.

நினைவிற்கு:- “கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக் களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்” (ஏசாயா 35:10).

Article by elimchurchgospel

Leave a comment