செப்டம்பர் 10 – சிருஷ்டியும் தேவனே!

“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” (சங். 51:10).

சிருஷ்டிப்பின் கர்த்தரை நோக்கி, “சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்” என்று தாவீது கெஞ்சுவதைப் பாருங்கள். கர்த்தர் சூரியனையும், சந்திரனையும் சிருஷ்டித்தார். காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள் என எல்லாவற்றையும் சிருஷ்டித்தார். அவைகள் எல்லாவற்றைப் பார்க்கிலும் ஒரு மனுஷனுடைய உள்ளத்திலே சுத்த இருதயம் சிருஷ்டிக்கப்படவேண்டியது மிகவும் அவசியம்!

நம்முடைய தேவனுக்கு, “எலோஹிம்” என்ற பெயர் உண்டு. எலோஹிம் என்றால், “சிருஷ்டிப்பின் தேவன்” என்று அர்த்தம். ஆதியிலே எலோஹிம் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதி. 1:1). கர்த்தர் எல்லாவற்றையும் தம்முடைய வார்த்தையினால் சிருஷ்டித்தார். தாவீது, தேவன் சிருஷ்டித்த எல்லாவற்றையும் நோக்கிப் பார்க்கிறார். தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவைகளெல்லாம் நல்லவைகளாக விளங்குகின்றன. தன்னுடைய இருதயத்தையும் நோக்கிப் பார்க்கிறார்.

மனுஷனுடைய இருதயமோ திருக்குள்ளதும், கேடுள்ளதும், அசுத்தமுள்ளதுமாக இருக்கிறது. தேவன் எவ்வளவுதான் மனுஷனைச் சுத்திகரிக்க முன்வந்தாலும் அவனுடைய உள்ளம் சிற்றின்பத்தில் சுழலுவதையே விரும்புகிறது. செய்ய வேண்டியவைகளைச் செய்யாமல், செய்ய வேண்டாதவைகளை செய்கிறது. மனுஷனுடைய இருதயத்தில் பரிசுத்தத்திற்கு விரோதமாய்ப் போராடுகிற பாவப்பிரமாணம் ஒன்று இருக்கிறது. அது நன்மை செய்யவிடாமல் தீமையையே செய்ய வைக்கிறது.

ஆகவேதான், சங்கீதக்காரன், ‘ஆண்டவரே, உலகத்தையெல்லாம் சிருஷ்டித்தீரே! என்னிலே சுத்தமான இருதயத்தை சிருஷக்கக்கூடாதா? தீமையை விட்டு விலகி உம்மை சார்ந்துக் கொள்ளும் ஒரு பரிசுத்த இருதயத்தை ஸ்தாபிக்கக்கூடாதா?’ என்று கண்ணீரோடு ஜெபிக்கிறார்.

இந்த உலகத்திலே காணக்கிடைக்காத ஒரு அபூர்வமான காரியம் ஒன்று உண்டென்றால் அது சுத்தமான இருதயம்தான். உங்கள் இருதயத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காகக் கர்த்தர் கொடுத்திருக்கிற ஒரு விசேஷமான காரியம்தான் பரிசுத்த ஆவியானவர். நீங்கள் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, வேத வசனங்களால் சுத்திகரிக்கப்படுகிறீர்கள். அதே நேரத்தில், பரிசுத்த ஆவியானவரால் சுத்த இருதயத்தைப் பெற்றுக்கொள்ளுகிறீர்கள். உங்கள் இருதயம் பரிசுத்தமாகுகிறது.

கொரிந்து சபையில் பலரும் கொடிய அநியாயக்காரர்களாகவும், வேசிமார்க்கத்தார்களாகவும், விபச்சாரர்களாகவும், திருடர்களாகவும், பொருளாசைக்காரர்களாகவும் விளங்கினார்கள். ஆனாலும் அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களிலே சுத்த இருதயத்தை ஸ்தாபிக்கக் கிருபையுள்ளவராயிருந்தார்.

தேவபிள்ளைகளே, பரிசுத்த ஆவியானவரே சுத்த இருதயத்தை உங்களிலே ஸ்தாபிக்க வல்லமையுள்ளவர். ஜெபித்துக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவான் 16:13).

Article by elimchurchgospel

Leave a comment