செப்டம்பர் 09 – சிருஷ்டிக்கிறவராய் இருக்கிறார்!

“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி.1:1).

நம் தேவன் சிருஷ்டி கர்த்தராய் இருக்கிறார். நாம் அவர் சிருஷ்டிப்பின் அங்கங்களாக இருக்கிறோம். இன்றைக்கும் அவருடைய சிருஷ்டிப்பின் வல்லமை குன்றிப்போய் விடவில்லை. அவர் உங்களுக்கு சகலவற்றையும் சம்பூரணமாய் சிருஷ்டித்துத் தர வல்லவராயிருக்கிறார்.

நம் தேவன் சூரியன், சந்திரனையும் மற்றவற்றையும் சிருஷ்டித்தபோது, வார்த்தையை அனுப்பி அவைகள் யாவையும் சிருஷ்டித்தார். தேவன்: “வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று” (ஆதி. 1:3). தேவன் ‘ஜலத்தின் மேல் ஆகாய விரிவு உண்டாகக்கடவது’ என்றார். அப்படியே ஆகாயவிரிவு உண்டாயிற்று. “பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று” (ஆதி. 1:11).

ஆனால் மனிதனை உருவாக்கும்போது, கர்த்தர் புதிய வழியைக் கையாண்டார். வேதம் சொல்லுகிறது, “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” (ஆதி. 2:7). சகலவற்றையும் வார்த்தையினால் உண்டாக்கின அந்த மகா வல்லமையுள்ள தேவன், நமக்கு தம்முடைய சாயலையும் ரூபத்தையும் கொடுத்து நம்முடைய பிதாவானார். அன்புள்ள தகப்பனானார்.

கர்த்தர் உங்களுடைய சிருஷ்டிகராய் இருக்கிறபடியினால், தேவனுடைய சாயலினால் சிருஷ்டிக்கப்பட்ட உங்கள்மேல் மிகவும் கரிசனையுள்ளவராயிருக்கிறார். சிருஷ்டிப்பின் நாளோடு அவருடைய சிருஷ்டிப்பின் வல்லமை முடிந்துவிட்டது என்று எண்ணிவிடக்கூடாது.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு வனாந்தரத்திலே மன்னாவை அனுப்பினார். அது பரலோகத்திலே தேவதூதர்களுடைய உணவாகும். அவர் மனிதனுக்காக அதை சிருஷ்டித்து அனுப்பிக்கொடுத்தார். இஸ்ரவேல் ஜனங்கள் இறைச்சி சாப்பிட விரும்பினபோது, காடைகளைச் சிருஷ்டித்து அனுப்பினார். ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் கொண்டு ஐயாயிரம் பேரை எப்படி போஷிக்க முடிந்தது? முடிவாக பன்னிரண்டு கூடைகளை எப்படி நிரப்ப முடிந்தது? அதுவே தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமை!

மனம் உடைந்து போயிருந்த தீர்க்கதரிசியாகிய யோனாமேல் கர்த்தர் மனதுருகினார். “யோனாவுடைய தலையின் மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரப்பண்ணினார்” (யோனா 4:6). யோனா இருந்த இடத்தின் அருகே எப்படி ஆமணக்கு விதை வந்தது? எப்படி அது ஓங்கி வளர்ந்தது? சாதாரணமாக, சிறிய செடியாய் மட்டுமே வளரக்கூடிய அந்த ஆமணக்கு மிக அதிகமாக நிழல் தரக்கூடிய விருட்சமாய் மாறியது எப்படி? ஆம், அதுதான் தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமை.

நினைவிற்கு:- “உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்” (ஏசாயா 54:5).

Article by elimchurchgospel

Leave a comment