செப்டம்பர் 08 – சந்தோஷமாயிருங்கள்!

“எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்” (1 தெச. 5:16).

சந்தோஷம் என்பது உங்களுடைய பிறப்புரிமை. தேவனுடைய பிள்ளைகளாகிய உங்களுக்கு, கர்த்தர் சந்தோஷத்தை வாக்குப்பண்ணியிருக்கிறார். இந்த சந்தோஷம் மேன்மையான சந்தோஷம். என்றென்றைக்கும் நிலைத்திருக்கக்கூடிய சந்தோஷம். இந்த சந்தோஷம் பரலோகம் உங்களுக்குக் கொடுக்கும் ஒன்று.

உலகம் காண்பிக்கிற போலியான சந்தோஷத்தின்மீது நாட்டம் கொண்டவனாய் குடி, சினிமா கொட்டகை, விபச்சாரம் ஆகியவற்றை நோக்கி, தேனை நோக்கி தீவிரிக்கிற எறும்பைப்போல மனிதன் ஓடுகிறான். அந்த எறும்பு தேனுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் மாண்டு போவதைப் போல மாண்டு போகிறான். அவைகள் வேதனையின் வழிகள், மரணத்தின் வழிகள், பாதாளத்திற்குள் கொண்டு செல்லும் வழிகள்.

ஆனால் கர்த்தரோ, உங்களை அவருக்குள் மகிழ்ந்து களிகூரச் செய்கிறார். இரட்சிப்பின் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறார். ஆடிப்பாடி கர்த்தரைத் துதிக்க உதவி செய்கிறார். இந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது.

நம் அருமை இரட்சகர் மீது ஏற்படும் ஒவ்வொரு நினைவும் நம்மைச் சந்தோஷப்படுத்துகிறது. ஆம், அவர் எவ்வளவு நல்லவர், எவ்வளவு வல்லமையுள்ளவர், எவ்வளவு மகத்துவமுள்ளவர்! எவ்வளவாய் நம்மில் அன்பு கூர்ந்தார்! எவ்வளவு அன்போடு நம்மைத் தேடி வந்தார்! ஜீவனைக் கொடுத்து நம்மை மீட்ட அவர் எவ்வளவு மனதுருக்கமுள்ளவர்! தாவீது தியானித்துவிட்டு எழுதுகிறார், “என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்” (சங். 35:9).

நீங்கள் கர்த்தரில் மகிழ சற்று நேரத்தை கண்டிப்பாய் ஒதுக்குங்கள். துதித்துப் பாட சந்தர்ப்பங்களை உண்டாக்கிக் கொள்ளுங்கள். கர்த்தருக்கு ஆராதனை செய்யவும், அவருடைய மகிமை மகத்துவத்தைத் தியானிக்கவும், உங்கள் உள்ளத்தில் இடம் கொடுப்பீர்களென்றால், உங்களுடைய சந்தோஷம் நிரம்பி வழிகிறதாய் இருக்கும். வேதம் சொல்லுகிறது, “இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்” (சங். 149:2).

அப். பவுல், “கர்த்தருக்குள் எப்பொழுதும்  சந்தோஷமாயிருங்கள்” (பிலி. 4:4) என்று சொல்லுகிறார். கர்த்தருக்கு வெளியே இருக்கும் சந்தோஷமல்ல, கர்த்தருக்குள் இருக்கும் சந்தோஷத்தை அவர் குறிப்பிடுகிறார். அதுதான் அவருடைய பிரசன்னத்திலிருக்கும் சந்தோஷம். அவருடைய சமுகத்தை உணர்வதினால் ஏற்படும் சந்தோஷம்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய உலக வாழ்க்கையின் நோக்கமும் அதுவாகவேயிருக்கட்டும். பிரசங்கி சொல்லுகிறார், “மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்” (பிர. 3:12).

நினைவிற்கு:- “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான் 15:11).

Article by elimchurchgospel

Leave a comment