ஏப்ரல் 16 – சுத்திகரிக்கும் கரம்!

“கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும், ஆடு மாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, …என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்” (யோவான் 2:15,16).

நீங்கள் இயேசுவின் கரத்தைப் பார்க்கும்போது, எப்பொழுதுமே அந்த கரம் அன்பின் கரமாகவும், மனதுருக்கத்தின் கரமாகவுமே இருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. துணிகரமான பாவங்களை காணும்போது, அவருடைய கரம் சாட்டையை எடுக்கிறது. அவருடைய கரம் கண்டிப்பின் கரம், சிட்சையின் கரம், அந்தக்கரமே தேவாலயத்தை அன்று சுத்திகரித்தது.

இயேசுகிறிஸ்து இரண்டு முறை தேவாலயத்தை சுத்திகரித்ததை நீங்கள் வேதத்தில் வாசிக்கலாம். அவர் போதகம் பண்ணும்படி எருசலேமுக்குப் போன முதலாவது பஸ்காவிலும், கடைசி பஸ்காவிலும் தேவாலயத்தை சுத்திகரித்தார். முதல் முறை சுத்திகரித்ததை அப். யோவான் மாத்திரம் சொல்லியிருக்கிறார். கடைசி முறை சுத்திகரித்ததை மத்தேயு, மாற்கு, லூக்கா என அனைவருமே சொல்லியிருக்கிறார்கள் (யோவான் 2:14-16, மாற்கு 11:15-17, மத். 21:12,13, லூக். 19:45,46).

இரண்டு முறையும் அவருடைய கரம் காசுக்காரர்களுடைய காசுகளை கொட்டினது, பலகைகளைக் கவிழ்த்தது, ஆசனங்களைத் தள்ளியது. கர்த்தருடைய கரத்திலிருந்த சவுக்கு வேகமாய் இயங்கி வியாபாரிகளை அடித்துத் துரத்தினது. வியாபாரப் பொருளாயிருந்த ஆடுமாடுகளையும் புறாக்களையும் விரட்டியது. கர்த்தர் தம்முடைய ஆலயத்தைக் குறித்து பக்தி வைராக்கியமுள்ளவராய் இருந்தார். அது வியாபார ஸ்தலமாவதையும், கள்ளர் குகையாவதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆம், அவருடைய பிரகாரங்களில் எங்கும் அவர் பரிசுத்தத்தை விரும்புகிறார். அவருடைய வீடு ஜெப வீடாய் இருக்க வேண்டுமே தவிர வியாபார ஸ்தலமாக விளங்கக்கூடாது.

தேவபிள்ளைகளே, உங்களுடைய சரீரம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறது. “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” (1 கொரி. 3:16). ஒருபோதும் உங்களுடைய சரீரத்தை தீட்டுப்படுத்தி, தேவனுடைய வாசஸ்தலத்தை கள்ளர் குகையாக்கி விடாதிருங்கள். கள்ள அன்புக்கு, கள்ள உறவுக்கு, இச்சைகளுக்கு இடங்கொடுத்து விடாதிருங்கள். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதில் அவர் அதிக வைராக்கியமுடையவராயிருக்கிறார்.

கர்த்தர் சொல்லுகிறார்: “ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்” (1 கொரி. 3:17). உங்கள் ஆலயம் தீட்டுப்படும்போது கர்த்தர் தம்முடைய கரத்திலே சாட்டையை எடுக்கிறார். வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்” (எபி. 12:6). தேவபிள்ளைகளே, கர்த்தர் சாட்டையை எடுத்தாலும் அதிலே ஒரு நன்மையுண்டு. உங்களுடைய உள்ளமாகிய ஆலயம் சுத்திகரிக்கப்பட்டு, உங்களுடைய வாழ்க்கை மறுரூபமாக்கப்படும்.

நினைவிற்கு:- “என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துக்கொள்ளப்படும்போது சோர்ந்து போகாதே” (எபி. 12:5).

Article by elimchurchgospel

Leave a comment