ஆகஸ்ட் 30 – எங்கள் கண்கள் உம்மையே நோக்கும்!

“எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” (2 நாளா. 20:12).

யூதாவின் ராஜாக்களிலே யோசபாத்தும் ஒருவர். அவர் கர்த்தரை நேசித்து, அவர்மேல் நம்பிக்கை வைத்திருந்த ஒரு ராஜா. திடீரென்று யோசபாத்திற்கு விரோதமாக அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யுத்தம் பண்ண வந்த போது, யோசபாத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவருடைய உள்ளம் கலங்க ஆரம்பித்தது.

ஆனால் அவர் உடனேயே கர்த்தரை நோக்கிப் பார்த்து ஜெபம் பண்ணினார். “தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப்பண்ணின உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள். எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை. நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” என்றார் (2 நாளா. 20:11,12).

அவர் கர்த்தரை நோக்கிப் பார்த்தது மட்டுமல்ல, கர்த்தரை ஒருமனப்பட்டு தேடுகிறதற்கு யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தார். அப்படியே யூதா ஜனங்கள் கர்த்தரிடத்திலே சகாயந்தேட கூடினார்கள். யூதாவிலுள்ள எல்லாப் பட்டணங்களிலும் இருந்து அவர்கள் கர்த்தரைத் தேட வந்தார்கள் (2 நாளா. 20:3,4).

தேவபிள்ளைகளே, இதுபோல பிரச்சனைகள் திடீரென்று வரும்போது, சாதாரண முறையிலே உங்களால் தீர்க்க முடியாத சிக்கல்கள் வரும்போது, குடும்பமாக உபவாசம் இருந்து, ஜெபம் பண்ணி, கர்த்தரை நோக்கிப் பாருங்கள். கர்த்தரை அனைவரும் ஒன்றாக சேர்ந்து தேடுகிறதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் குடும்பமாக உபவாசித்து, கர்த்தரைத் தேடும்போது, ஜெயம் பெறுவீர்கள்.

ஒரு குடும்பத்தில் பயங்கரமான பில்லிசூனியமும், போராட்டமும், சோதனைகளும் தாக்கி குடும்பத்தை சீரழிக்க முன் வந்தபோது, அந்த குடும்பத்தினர் மூன்று நாட்கள் உபவாசம் பண்ணி ஜெபம் பண்ணினார்கள். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த மூன்று நாட்களும் அவர்கள் அன்புடன் வளர்த்த நாயும், பூனையும்கூட உணவு அருந்தவில்லை. அவர்கள் பாய் விரித்து ஜெபித்துக் கொண்டிருந்தபோது, அவைகளும் அங்கே வந்து சுருண்டு படுத்துக்கொண்டன. மூன்றாம் நாளிலே கர்த்தர் பலத்த வெற்றியைக் கொடுத்தார். அந்த குடும்பம் பூரண விடுதலையடைந்தது.

அதுபோலவே யோசபாத் ராஜா கர்த்தரை நோக்கிப்பார்த்து உபவாசம் பண்ணி, பாடி துதித்தபோது கர்த்தர் அவர்களுடைய பகைவர்களை ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை எழும்பப்பண்ணினார். அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள் (2 நாளா. 20:22).

தேவபிள்ளைகளே, கர்த்தரையே நோக்கிப்பாருங்கள். குடும்பமாக உபவாசமிருந்து ஜெபியுங்கள். ஜெயம் பெறுவீர்கள்.

நினைவிற்கு:- “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்” (சங். 46:11).

Article by elimchurchgospel

Leave a comment