ஆகஸ்ட் 28 – நீ வந்த வழியிலே!

“நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கு என்னை அனுப்பினார்” (அப். 9:17).

“நீ வந்த வழியிலே…” என்று சொல்லி அப். பவுலுக்கு அனனியா முக்கியமான ஒரு காரியத்தை ஞாபகப்படுத்துகிறார். சவுல் சபையை துன்பப்படுத்துகிறவனாக வந்த வழியிலே கர்த்தர் குறுக்கிட்டார். தமஸ்குக்கு சமீபமாய் வந்த வழியிலே சடிதியாய் வானத்திலிருந்து ஒரு ஒளி சவுலைச் சுற்றிப் பிரகாசித்தது. அதுதான் கர்த்தர் சவுலை பவுலாக்கிய சந்தர்ப்பமாகும்.

நீங்கள் எந்த வழியில் சென்று கொண்டிருக்கிறீர்கள்? கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமான வழியிலே சென்று கர்த்தரைத் துக்கப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? சாபத்தின் வழியிலே நடந்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வழியிலே கர்த்தர் குறுக்கிட்டு, உங்களை நேர் வழிப்படுத்த விரும்புகிறார்.

துபாய்க்குச் செல்ல திட்டமிட்டிருந்த ஒரு சகோதரன், அவ்வாறு செல்லுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் சென்னையிலிருக்கும் தன் நண்பருடைய வீட்டிற்கு வந்தார். அப்பொழுது சென்னை கடற்கரையில் உட்கார்ந்து இரவிலே ஜெபிப்பதற்காக அவரது நண்பர்கள் புறப்பட்டார்கள். இந்த சகோதரனும் அவர்களோடுகூட சேர்ந்து ஜெபிக்கச் சென்றார். அவர்கள் வட்டமாக அமர்ந்து ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தருடைய ஆவியானவர் பலமாய் அவர்கள்மேல் இறங்கினார்.

துபாய் செல்லவிருந்த சகோதரனை கர்த்தர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் அளவில்லாமல் நிரப்பினார். பல மணி நேரங்கள் அந்த அபிஷேகம் அவரிலே பொங்கி வழிந்து கொண்டேயிருந்தது. முடிவாக நடந்தது என்ன தெரியுமா? துபாயில் சென்று பணம் சம்பாதிக்க வேண்டுமென்று விரும்பிய அவர், அந்த வழியை மாற்றி, கர்த்தருடைய முழுநேர ஊழியக்காரரா, ஆத்துமாக்களை சம்பாதிக்க தன்னை ஒப்புக்கொடுத்தார்.

உங்களுடைய வழிகளைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவரையே சார்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்களுடைய பாதை எல்லாம் நெய்யாய்ப் பொழிய அவர் உதவி செய்வார். மட்டுமல்ல நீங்கள் நடக்கிற வழிகளிளெல்லாம் கர்த்தர் உங்களோடுகூட நடந்து வருவார். நீங்கள் இனி தனிமையாய் நடப்பதில்லை.

மோசே இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து அன்போடு சொன்னார். “ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்து கொண்டு போவதுபோல், நீங்கள் இவ்விடத்திற்கு வருகிற வரைக்கும், நடந்து வந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்து கொண்டு வந்ததைக் கண்டீர்களே, உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் பாளயமிறங்கத்தக்க இடத்தைப்பார்க்கவும், நீங்கள் போக வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும், இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்கு முன் சென்றாரே” (உபா. 1:31-33).

தேவபிள்ளைகளே, பல தோல்விகளினால் மனம் கசந்து கர்த்தருடைய பாதையை விட்டு விலகி விட்டீர்களோ? எனக்கு ஒரு விடிவு காலம் உண்டா என்று கலங்குகிறீர்களோ? விசுவாசத்தோடு கர்த்தருடைய வழிக்கு மீண்டும் திரும்பி வாருங்கள். அவர் பரிசுத்த பாதையிலே உங்களை வழிநடத்துவார்.

நினைவிற்கு:- “கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்” (ஏசாயா 52:12).

Article by elimchurchgospel

Leave a comment