ஆகஸ்ட் 27 – கர்த்தருடைய முகத்தின் ஒளி!

“எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்” (சங். 4:6).

சகலவிதமான நன்மைகளையும் சம்பூரணமாய்க் கொடுக்கிற கர்த்தர் நமக்கு இருக்கிறார். “எங்களுக்கு நன்மை காண்பிப்பவர் யார்?” உலகத்தாரைப் போல நாம் புலம்ப வேண்டியது இல்லை.

கர்த்தர் உங்களுடைய மேய்ப்பராயிருக்கிறார். நீங்கள் அவருடைய ஆடுகளாய் இருக்கிறதினாலே, நீங்கள் ஒருநாளும் குறைவுபட்டுப் போவதேயில்லை. ஒருநாளும் தாழ்ச்சியடைவதில்லை. எரேமியா தீர்க்கதரிசி, “கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்தியராஜா” (எரே. 10:10) என்று சொல்லுகிறார்.

உண்மையாகவே கர்த்தரைத் தஞ்சமாகக் கொண்டிருக்கிறவர்கள், அவருடைய அன்பை ருசிக்கிறவர்கள், அவருடைய வழியிலே உத்தமமாய் நடக்கிறவர்கள், அவருடைய முகத்தின் ஒளியினால் பிரகாசமடைகிறவர்கள் பாக்கியவான்கள். வேதம் சொல்லுகிறது, “ஜனங்களை அவர்கள் மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின்பலிகளை இடுவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அநுபவிப்பார்கள் என்றான்” (உபா. 33:19).

தம் பிள்ளைகளை திருப்தியாய் போஷித்து வழிநடத்துகிற ஆண்டவர், இந்த பூமியிலுள்ள ஆசீர்வாதங்களோடுகூட கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் கொடுக்கிறவர். மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அநுபவிக்கும்படி அனுக்கிரகம் செய்கிறவர். உலகத்தாருக்கு அதை மறைத்து வைத்திருக்கிறார். ஆனால் தம்முடைய பிள்ளைகளுக்கோ வாரி வழங்குகிறார்.

19-ம், 20-ம் நூற்றாண்டிலே கண்டுபிடிக்கப்பட்ட பலவிதமான விஞ்ஞான படைப்புகளைக் கண்டுபிடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவ விஞ்ஞானிகள்தான். அவர்கள் தேவபக்தியுள்ளவர்கள். அவர்கள் ஜெபித்து கர்த்தரிடத்தில் கேட்டபோது, மறைபொருட்களை அவர்களுக்கு வெளிப்படுத்தி கொடுத்தார். கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும்போது, அவரிடத்திலே மனம் திறந்து கேட்கும்போது, அவர் அறிவாகிய பொக்கிஷத்திலிருந்தும், ஞான பொக்கிஷத்திலிருந்தும் அளவில்லாமல் கொடுத்து ஆசீர்வதிக்கிறார்.

உலகத்திலே, அமெரிக்காவின் விஞ்ஞானிகள்தான் முதன்முதலாக சந்திர மண்டலத்திற்கு ராக்கெட்டிலே சென்று அங்கே கால் மிதித்தார்கள். அந்த விண்வெளி வீரர்கள் வேதாகமத்தை தங்களோடுகூட எடுத்துச் செல்ல மறக்கவில்லை. ஆகவேதான் சரித்திரத்தில் நீங்காத புகழை கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்தார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் ஞானத்திலும், அறிவிலும் விவேகத்திலும் குறைவுள்ளவர்களாய் காணப்படுகிறீர்களா? இன்றைக்கு கர்த்தரை நோக்கிப் பாருங்கள். வேதம் சொல்லுகிறது, “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” (யாக். 1:5).

நினைவிற்கு:- “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:4).

Article by elimchurchgospel

Leave a comment