ஆகஸ்ட் 22 – இந்தப் பலத்தோடே போ!

“உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்” (நியா. 6:14).

இஸ்ரவேலின் ஜெயபலமானவர், சேனைகளின் கர்த்தராயிருக்கிற தேவாதி தேவன், உங்களுக்குத் தருகிற வல்லமையான வாக்குத்தத்தம் என்ன? ‘உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ’ என்பதாகும். ஆம், கர்த்தருடைய நாமத்தினாலே புறப்பட்டுப் போங்கள். கர்த்தர் உங்களோடு வருகிறார். அவருடைய பிரசன்னம், அவருடைய வல்லமை உங்களோடுகூட வருகிறது. நீங்கள் காத்திருந்த நாட்கள் முடிவடைகின்றன.

இன்று அநேக மக்கள் சோர்டைந்து போயிருக்கிறார்கள். ஒரு நாள் கிதியோனும் அவ்விதமான சோர்விலே அமர்ந்திருந்தார். காரணம், விரோதிகளான மீதியானியர்கள் அவரை ஆண்டார்கள். எதைச் செய்தாலும் விரோதிகளுக்குப் பயந்து பயந்தே செய்ய வேண்டியதாயிருந்தது. கர்த்தர் மட்டும் எங்களோடு இருந்தால் ஏன் எங்களுக்கு இந்த அவல நிலை? எங்களுடைய முற்பிதாக்கள் விவரித்து சொன்ன அந்த அற்புத தேவன் எங்கே என்று கேட்டு கிதியோன் சோர்ந்து போயிருந்தார்.

உங்கள் வாழ்க்கையிலும் பிரச்சனைகளும் சோர்வும், வரும். உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனால் என்றென்றைக்குமாக ஆண்டவர் உங்களை உபத்திரவத்திலே தள்ளி விடுகிறவரல்ல. இமைப்பொழுது கைவிட்டாலும் உருக்கமான இரக்கங்களினால் சேர்த்துக் கொள்ளுகிறவர். அவர் பயந்து போய் இருந்த கிதியோனை திடப்படுத்தி, “பராக்கிரமசாலியே” என்று அழைத்தார். பெலன் இல்லையே, சத்துவம் இல்லையே என்று தவித்துக் கொண்டிருந்த அவனைப் பார்த்து, “உனக்கு இருக்கும் இந்தப் பலத்தோடே போ” என்று சொன்னார்.

பிசாசின் பெரிய தந்திரங்களில் ஒன்று பயத்தின் ஆவியினால் ஜனங்களைக் கட்டி வைப்பதுதான். சூழ்நிலைகளைப் பற்றிய ஒரு பயம். பிரச்சனைகளைக் குறித்த ஒரு பயம். எதிர்காலத்தைக் குறித்த ஒரு பயம். பயப்படுத்தி பயப்படுத்தியே தேவ ஜனங்களை செயலற்று போகப் பண்ணுகிறான். வேதம் சொல்லுகிறது, “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2 தீமோ. 1:7).

உங்கள் பலவீனத்தைக் குறித்து சோர்ந்து போகாதிருங்கள். உங்களுடைய குறைகளைக் குறித்து எண்ணி தாழ்வு மனப்பான்மைக்கு ஒப்புக் கொடுத்து விடாதேயுங்கள். கர்த்தரை நோக்கிப் பாருங்கள். அவர் எவ்வளவு பெலனுள்ளவர். அவர் உங்களை நேசித்து, உங்களுக்கு தன் பலனைத்தர வல்லமையுள்ளவராயிருக்கிறாரே. ஆம், பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நிச்சயமாகவே நீங்கள் பெலன் அடைவீர்கள் (அப். 1:8).

தேவபிள்ளைகளே, ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிற தேவனுடைய வசனம் நிச்சயமாகவே உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தைப் பெலப்படுத்தும். “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13) என்று பவுல் சொன்னாரல்லவா?

நினைவிற்கு:- “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்” (வெளி. 3:8).

Article by elimchurchgospel

Leave a comment