ஆகஸ்ட் 19 – பிரியமான விசுவாசி!

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” (எபி. 11:6).

இந்த உலகத்தில், உங்களுடைய வாழ்க்கையின் நோக்கமெல்லாம் கர்த்தரைப் பிரியப்படுத்த வேண்டுமென்பதாகவே இருக்க வேண்டும். நீங்கள் அவரைப் பிரியப்படுத்தினால் அவர் உங்களில் மகிழ்ந்து களிகூருகிறது மட்டுமல்லாமல், நித்தியமாய் உங்களுக்குப் பிரியமான ஆத்தும நேசராகவும் இருப்பார். அவரைப் பிரியப்படுத்துவது எப்படி?

முதலாவது, கர்த்தர் உங்கள்மேல் பிரியமாய் இருப்பது, அவர் மேல் நீங்கள் வைத்த விசுவாசத்தினாலாகும். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” என்று வேதம் சொல்லுகிறது. ஆம் நீங்கள் அவரை நம்ப வேண்டும். நூற்றுக்கு நூறு முழுவதுமாக உங்களுடைய விசுவாசத்தை அவர் மேல் மட்டுமே வைக்க வேண்டும். “ஆண்டவரே நான் உம்மையே நம்பி விசுவாசிக்கிறேன்” என்று ஆயிரம் முறை சொல்லுங்கள். அப்படியே அந்த விசுவாசத்தை செயல்படுத்துங்கள்.

உங்கள் வாழ்க்கை விசுவாசம் உள்ளதாய் இருப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? வேதம் சொல்லுகிறது, “விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:17). உங்கள் வாழ்க்கை விசுவாசத்துடன் கூடியதாய் இருப்பதற்கு தேவ வசனம் மிகவும் அவசியம். ஆவியும் ஜீவனுமாய் இருக்கிற வேத வசனம் கிறிஸ்துவின் பிரியத்தை உங்கள்மேல் கொண்டு வர பெரும் பங்கு வகிக்கிறது. நீங்கள் அவரில் விசுவாசம் வைத்து அவரைச் சார்ந்து கொள்ளும்போது, அவர் உங்கள்மேல் பிரியமாயிருப்பார்.

கர்த்தர் ஆபிரகாமின் மேல் பிரியம் வைத்ததின் இரகசியம் என்ன? ஆபிரகாம் தேவனை விசுவாசித்ததேயாகும். வேதம் சொல்லுகிறது, “தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” (ரோமர் 4:21). அந்த விசுவாசம் மூன்று பகுதிகளைக் கொண்டதாயிருக்கிறது.

முதலாவது, தன் சரீரமும் சாராளின் கர்ப்பமும் செத்துப் போனதை எண்ணாதிருந்தார். இரண்டாவது, கர்த்தர் தனக்கு என்ன சொல்லியிருக்கிறார் என்பதை மட்டுமே எண்ணினார். மூன்றாவது, தேவனை மகிமைப்படுத்திக் கொண்டே விசுவாசத்தில் வல்லவரானார். அதன் மூலமாய் தேவனுக்குப் பிரியமானவராய் விளங்கினார்.

ஆபிரகாமைப் போல உங்கள் சரீர பெலவீனத்தை எண்ணாதிருங்கள். மற்ற தோல்விகளையும், குறைகளையும் எண்ணாதிருங்கள். அதே நேரத்தில், கர்த்தருடைய வாக்குத்தத்தங்களையும், அவர் செய்த அற்புதங்களையும் நினைவில் கொள்ளுங்கள். பின்பு, “ஆண்டவரே இவைகளையெல்லாம் நீர் என் வாழ்க்கையில் செய்யப் போகிறதற்காக ஸ்தோத்திரம்” என்று சொல்லி அவரை மகிமைப்படுத்துங்கள். அப்பொழுது நீங்களும் ஆபிரகாமைப் போல விசுவாசமுள்ளவர்களாய் மாறி தேவனைப் பிரியப்படுத்துவீர்கள்.

கர்த்தரை முழுவதுமாய் விசுவாசியுங்கள். அவருக்குப் பிரியமானவர்களாய் இருப்பதற்கு அதுவே வழி.

நினைவிற்கு:- “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவை களின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபி. 11:1).

Article by elimchurchgospel

Leave a comment