ஆகஸ்ட் 17 – யாரைப் பிரியப்படுத்துகிறீர்கள்?

“அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்” (ரோமர் 15:1).

நீங்கள் யாரைப் பிரியப்படுத்துகிறீர்கள்? உங்களுடைய வாழ்க்கை யாரைச் சார்ந்ததாய் இருக்கிறது? யாரை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்? சிலர் தங்களைத் தாங்களே பிரியப்படுத்திக் கொள்ளுகிறார்கள். சிலர் ஜனங்களை பிரியப்படுத்துகிறார்கள். தங்களைத் தாங்களே பிரியப்படுத்துகிறவர்கள் சுயநலவாதிகளாய் இருக்கிறார்கள். மற்றவர்களைப் பிரியப்படுத்தி வாழுகிறவர்கள் முடிவில் வேதனையடைகிறார்கள். ஆனால் கர்த்தரைப் பிரியப்படுத்துகிறவர்களோ, என்றென்றுமாய் சந்தோஷப்படுவார்கள்.

பிலாத்துவைப் பாருங்கள்! அவன் ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுடையவனாயிருந்தான் (மாற்கு 15:15). ஜனங்களைப் பிரியப்படுத்தினால் அவர்களுடைய ஆதரவு கிடைக்கும் என்றும், பதவியில் இன்னும் கொஞ்ச நாள் நீடித்திருக்கலாம் என்றும், பிலாத்து தப்புக்கணக்குப் போட்டான். பரபாசை விடுதலையாக்குவதே ஜனங்களுக்கு பிரியமாயிருக்கிறது. ஜனங்களைப் பிரியப்படுத்தினால் அவர்கள் நம்மை மதிப்பார்கள், வெகுமதிகள் கிடைக்கும், அரசாட்சியையும் பிரச்சனையில்லாமல் நடத்தலாம் என்று எண்ணினான். அவன் இயேசுவைப் பிரியப்படுத்த விருப்பம் கொள்ளவில்லை. அவரைப் பிரியப்படுத்தி எனக்கு என்ன ஆகப் போகிறது” என்று அவன் எண்ணியிருந்திருக்கக்கூடும்.

அந்தோ! பிலாத்துவினுடைய முடிவு காலம் மிகவும் பரிதாபமாய் இருந்ததாகவும், மனச்சாட்சியில் குத்துண்டவனாக பைத்தியம் பிடித்து அலைந்து திரிந்ததாகவும், வாழ்க்கையின் முடிவில் ஒரு குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் சரித்திர நூல்கள் சொல்லுகின்றன. பிலாத்து செய்ததைப் போல் மனுஷனைப் பிரியப்படுத்தி, கர்த்தரைத் துக்கப்படுத்தி விடாதிருங்கள். நாசியிலே ஜீவசுவாசத்தை ஊதினவரும், உங்களுக்காக தம்மைத் தாமே சிலுவையில் அர்ப்பணித்தவருமாகிய இயேசுவையே பிரியப்படுத்துங்கள்.

நீங்கள் உங்களுடைய குடும்பத்திலே கணவனை, பிள்ளைகளை, உறவினர்களை பிரியப்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால் கர்த்தருடைய உள்ளத்தை மனநோகச் செய்துவிட்டு உலகத்திலுள்ளவைகளின் மேல் அன்புகூர்ந்து விடக்கூடாது.

இராணுவத்திலே பணியாற்றின ஒரு உயர் அதிகாரியின் மனைவி, கணவன் தன் நண்பர்களுக்கு மதுவைக் குடிக்க ஊற்றிக் கொடுக்கச் சொன்ன போது, மறுத்துவிட்டாள். அவள், “மனைவி என்கிற முறையிலே நான் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. ஆனால் கர்த்தரை துக்கப்படுத்தி உங்களைப் பிரியப்படுத்த நான் விரும்பவில்லை” என்று அன்போடு கூறிவிட்டாள்.

நீங்கள் இந்த பூமியிலே வாழுகிற காலம் கொஞ்சம்தான். ஆனால் கர்த்தரோடு கோடி கோடி ஆண்டுகள் பரலோக ராஜ்யத்தில் வாழவேண்டும். நீங்கள் மனுஷரைப் பிரியப்படுத்துகிறீர்களா அல்லது கர்த்தரைப் பிரியப்படுத்துகிறீர்களா? தேவபிள்ளைகளே, கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழத் தீர்மானியுங்கள்.

நினைவிற்கு:- “இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே” (கலா. 1:10).

Article by elimchurchgospel

Leave a comment