ஆகஸ்ட் 09 – சந்தோஷப்படுத்துவார்!

“நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்” (எரே. 31:13).

நமதருமை ஆண்டவர் எவ்வளவாய் நம்மை ஆற்றித் தேற்றி உள்ளத்தைத் திடப்படுத்தும் வாக்குத்தத்தத்தைத் தருகிறார் பாருங்கள்! “அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்” என்று வாக்களிக்கிறார். ஆம், சஞ்சலத்தின் நாட்களும், துயரத்தின் நாட்களும், வேதனையின் நாட்களும் முடிவடைகின்றன.

கர்த்தருடைய கரம் உங்களுடைய வாழ்க்கையில் குறுக்கிடும்போது, எந்த துக்கமும் நீடித்திருக்க முடியாது. அவர் உங்களுடைய கண்ணீரைத் துடைத்து, ஆறுதல்படுத்துகிறதோடு நின்று விடுகிறவரல்ல. உங்கள் துக்க நாட்களை முடிவுக்குக் கொண்டு வருகிறவர். உங்களுடைய துக்கத்தை சந்தோஷமாக மாற்றி ஆசீர்வதிக்கிறவர். தேவனில் அன்பு கூருகிறவர்களுக்கு நிச்சயமாகவே சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது (ரோமர் 8:28).

உங்களுடைய வாழ்க்கையில், துக்கமும், துயரமும் சூழும்போது, இது ஏன் எனக்கு நேரிடுகிறது, ஏன் என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோதனைகள் என்று கலங்கித் தவிக்கிறீர்கள். ஆனால் கர்த்தர் எல்லாவற்றையும் நன்மையாக மாறப்பண்ணும்போது, அது உங்களுக்கு பெரிய ஆசீர்வாதமாய்க் காணப்படும்.

என்னுடைய தகப்பனார் கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு, பல்வேறு வகையான வேலைகளுக்கு விண்ணப்பித்துக்கொண்டேயிருந்தார். வங்கி மற்றும் அரசாங்க வேலைகளுக்கு முயற்சித்தார். ஆனால் கர்த்தரோ, அவருக்கு ஒரு பள்ளிக் கூடத்தில் கணித ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பைக் கொடுத்தார். அது அரசாங்க பள்ளிக்கூடம். சரியான வகுப்பு அறைகள் இல்லாததால் பல மாதங்கள் மரத்தடியிலே மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டியதாயிருந்தது.

அந்த மாணவர்களில் அநேகர் பல வகுப்புகளில் தவறி, மீண்டும் முயன்று தேர்ச்சி பெற்று வந்தவர்கள். போதுமான கிரகிக்கும் சக்தி இல்லாதவர்கள். என் தந்தை, அவருடைய முழு பெலத்தோடும் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தினார். படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டி எழுப்பியதினாலே, தாழ்வு நிலையில் இருந்த அவர்கள் சிறந்த மாணவர்களாய் மாறினார்கள். கர்த்தர் அவரை ஆசிரியர் வேலைக்குக் கொண்டு வந்ததில் ஒரு நோக்கமிருந்தது. பிற்காலத்தில் அவர் ஒரு சிறந்த பிரசங்கியாராக உருவாவதற்கும் அது ஒரு படியாக அமைந்தது.

யோசேப்பைப் பாருங்கள்! அவருடைய சொந்த சகோதரர்கள் அவரை அடிமையாக விற்றார்கள். அவர் உண்மையும், உத்தமமுமாய் வீட்டு வேலை செய்தபோது, அவரைக் கைதியாக்கி சிறைக்கு அனுப்பினார்கள். ஆனால் கர்த்தரோ, யோசேப்பை எகிப்தின் அதிபதியாக உயர்த்தினார்.

தேவபிள்ளைகளே, எவ்வளவுக்கெவ்வளவு பாடுகளை நீங்கள் அனுபவிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உயர்வுகள் உங்களுக்குக் காத்திருக்கின்றன. உங்கள் துக்கம் நிரந்தரமானதல்ல. கர்த்தர் உங்கள் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றுவார்.

நினைவிற்கு:- “தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்” (சங். 90:15).

Article by elimchurchgospel

Leave a comment